நடந்து சென்ற இளம்பெண்ணிடம் பணம் பறிக்க முயன்ற பைக் கொள்ளையர்கள்... அடுத்து நடந்த டுவிஸ்ட்
|அர்ஜென்டினாவில் இளம்பெண்ணிடம் கொள்ளையடிக்க முயன்ற 18 மற்றும் 19 வயதுடைய பைக் கொள்ளையர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
பியூனஸ் அயர்ஸ்,
அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் குவில்மெஸ் என்ற பகுதியில் இளம்பெண் ஒருவர் சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது அவரை 2 பேர் கவனித்து பின்தொடர்ந்து சென்றுள்ளனர். ஆட்கள் குறைவாக காணப்பட்ட அந்த பகுதியில், யாரும் எதிர்பாராத வகையில், முகமூடி அணிந்திருந்த அவர்கள் இருவரும் பைக்கில் திடீரென வந்து அந்த இளம்பெண்ணை மறித்தபடி நின்றனர்.
அவர்களில் ஒருவர் பைக்கில் இருந்து இறங்கி இளம்பெண்ணிடம் கொள்ளையடிக்கும் நோக்கில் ஓடியுள்ளார். ஆனால், அவர்களை கண்டதும் ஏதோ தவறாக நடக்க போகிறது என்று உஷாரான அந்த இளம்பெண் உடனடியாக தன்னிடம் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அந்நபரை நோக்கி 3 முறை சுட்டுள்ளார்.
இந்த அதிரடி தாக்குதலை எதிர்பாராத அந்த கொள்ளையர் மீண்டும் பைக்கை நோக்கி ஓடினார் எனினும், அவருக்கு காயங்கள் ஏற்பட்டன. இதன்பின்பு, சம்பவ இடத்தில் இருந்து அவர்கள் இருவரும் தப்பினர். அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இதுபற்றி அறிந்த போலீசார் 18 மற்றும் 19 வயதுடைய அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
இதுபற்றிய வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது. இதில், அந்த இளம்பெண் ஒரு காவலர் என்பதும், அன்றைய தினம் பணியில் இல்லாமல், பொதுமக்களில் ஒருவராக அந்த பகுதியில் நடந்து சென்றுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. எனினும், தற்காப்புக்காக தன்னுடன் துப்பாக்கியை அவர் எடுத்து சென்றிருக்கிறார். உடனடியாக யோசித்து செயல்பட்ட அந்த காவலரை நெட்டிசன்கள் புகழ்ந்துள்ளனர்.