< Back
உலக செய்திகள்
லெபனான்-இஸ்ரேல் எல்லையில் நடக்கும் போர் நாளை முடிவுக்கு வருகிறது - ஜோ பைடன் அறிவிப்பு
உலக செய்திகள்

லெபனான்-இஸ்ரேல் எல்லையில் நடக்கும் போர் நாளை முடிவுக்கு வருகிறது - ஜோ பைடன் அறிவிப்பு

தினத்தந்தி
|
27 Nov 2024 6:48 AM IST

போரை நிறுத்துவதற்கான அமெரிக்க முன்மொழிவை இஸ்ரேலும், ஹிஸ்புல்லாவும் ஏற்றுக்கொண்டதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க முன்மொழிவை இஸ்ரேலும், ஹிஸ்புல்லாவும் ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "இன்று, மத்திய கிழக்கில் இருந்து எனக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. நான் லெபனான் மற்றும் இஸ்ரேல் பிரதமர்களுடன் பேசினேன். மேலும் இந்த செய்தியை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொல்லாவுக்கும் இடையிலான பேரழிவுகரமான மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் திட்டத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்" என்று அதில் ஜோ பைடன் பதிவிட்டுள்ளார்.

தனது மற்றொரு பதிவில், "இன்று எட்டப்பட்ட ஒப்பந்தத்தின்படி, லெபனான்-இஸ்ரேல் எல்லையில் நடக்கும் போர் நாளை முடிவுக்கு வருகிறது. இஸ்ரேல் மற்றும் லெபனான் மக்களுக்கு நீடித்த பாதுகாப்பை போர்க்களத்தில் மட்டும் அடைய முடியாது. அதனால்தான் போர் நிறுத்தத்தை உருவாக்க இஸ்ரேல் மற்றும் லெபனான் அரசாங்கங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு எனது குழுவை நான் அறிவுறுத்தினேன்" என்று அதில் ஜோ பைடன் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக லெபனானின் ஹிஸ்புல்லா படையினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடைபெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதர் மைக் ஹெசாக் தெரிவித்திருந்தார்.

மேலும் லெபனானைச் சேர்ந்த ஆயுத அமைப்பான ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு தான் ஆதரவளிப்பதாகவும், அதை தனது அமைச்சரவைக்கு பரிந்துரைப்பதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தார். மேலும் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய காசாவின் ஹமாஸ் அமைப்பினருடனான போர் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டுவதற்கானகூட்டம் தொடங்கும் முன் ஹிஸ்புல்லா அமைப்புக்கு தண்டனை வழங்கும் விதமாக லெபனானில், இஸ்ரேல் போர்விமானங்கள் நேற்று தாக்குதல் நடத்தின. அதில் 23 பேர் உயிரிழந்தனர். அதேபோல் லெபனானில் உள்ள லிதானி நதிக்கு அருகில் உள்ள பகுதிகளில் முதல்முறையாக இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலை நடத்தியது.

அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட இந்த ஒப்பந்தம் நிறைவேறும்பட்சத்தில் இஸ்ரேலுக்கும், ஈரான் ஆதரவுபெற்ற ஆயுத அமைப்புகளுக்கும் கடந்த 14 மாதங்களாக தொடர்ந்து வரும் போர் முடிவதற்கான தொடக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்