< Back
உலக செய்திகள்
அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் ரஷியாவை தாக்கலாம்: உக்ரைனுக்கு பைடன் அனுமதி
உலக செய்திகள்

அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் ரஷியாவை தாக்கலாம்: உக்ரைனுக்கு பைடன் அனுமதி

தினத்தந்தி
|
18 Nov 2024 3:33 PM IST

அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்பிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு 2 மாதங்கள் உள்ள நிலையில், முக்கிய கொள்கையில் மாற்றம் வந்துள்ளது.

வாஷிங்டன்:

ரஷியா-உக்ரைன் போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இந்த போரில் உக்ரைன் தரப்பில் இதுவரை சுமார் 11 ஆயிரத்து 700 பேர் பலியானதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன. பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளும் நடைபெறுகின்றன. எனினும் தாக்குதல் குறைந்தபாடில்லை.

கடந்த சில தினங்களாக உக்ரைனின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷியா உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் இரவு உக்ரைன் மீது 120 ஏவுகணைகள் மற்றும் 90 டிரோன்கள் மூலம் தாக்குதலை நடத்தியது. இன்று அதிகாலையிலும் 210 ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனால் உக்ரைன் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது.

ரஷியாவின் ஏவுகணைகளில் பெரும்பாலான ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை உக்ரைன் வான்பாதுகாப்பு படையினர் இடைமறித்து சுட்டு வீழ்த்தினர். ஒரு சில பகுதிகளில் உள்கட்டமைப்புகள் மற்றும் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. ரஷியாவின் தாக்குதலால் நிலைகுலைந்த உக்ரைன் மக்கள், உயிருக்கு பயந்து ரெயில் நிலையங்கள், சுரங்கப்பாதைகள் போன்ற இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

இவ்வாறு போர்ப்பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனுக்கு வழங்கிய சக்திவாய்ந்த ஏவுகணைகளை போரில் பயன்படுத்த அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.

அதாவது ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்துவதற்கு நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தலாம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அனுமதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, உக்ரைன் தனது தாக்குதலை தீவிரப்படுத்தும். ரஷியாவுக்குள் அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகளை வீச உக்ரைன் தயாராகி வருகிறது. முறைப்படியான அனுமதி வரப்பெற்றதும் தாக்குதலை தொடங்கும்.

அமெரிக்கா தனது தயாரிப்பான ATACMS என்ற நீண்ட தூர ஏவுகணைகளை ஏற்கனவே உக்ரைனுக்கு வழங்கி உள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பிரதேசத்தில் உள்ள ரஷிய இலக்குகளை தாக்குவதற்காக இந்த ஏவுகணைகளை உக்ரைன் ராணுவம் ஒரு வருடத்திற்கும் மேலாக பயன்படுத்துகிறது. ஆனால், ரஷியாவிற்குள் இதனை பயன்படுத்த அமெரிக்கா இதுவரை அனுமதிக்கவில்லை. ஏனெனில் அவை போரை அதிகரிக்கும் என்று அமெரிக்கா கருதியது. தற்போது ரஷியா தனது தாக்குதலை தீவிரப்படுத்திய நிலையில், நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அனுமதி அளித்துள்ளார்.

அத்துடன், அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்பிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு இரண்டு மாதங்கள் உள்ள நிலையில், முக்கிய கொள்கையில் தலைகீழ் மாற்றம் வந்துள்ளது. டிரம்ப் வெற்றி பெற்றதையடுத்து, உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்து வந்த ஆதரவின் எதிர்காலம் எப்படி இருக்குமோ? என்ற அச்சம் எழுந்தது. எனவே பைடன் பதவியில் இருக்கும் சிறிது காலத்தில் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய ஆர்வமாக உள்ளார்.

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிடாததால் உக்ரைன் மீது 2022-ம் ஆண்டு ரஷியா போர் தொடுத்தது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களை சப்ளை செய்கின்றன. அவற்றின் உதவியால் உக்ரைன் இந்த போரில் தாக்குப்பிடிக்கிறது.

ரஷியாவை தாக்க மேற்கத்திய ஆயுதங்களைப் பயன்படுத்துவதை அனுமதிக்கக்கூடாது என ரஷிய அதிபர் புதின் எச்சரித்திருக்கிறார். அவ்வாறு செய்தால் உக்ரைன் போரில் நேட்டோ நாடுகள் நேரடியாக பங்கேற்றதாக ரஷியா கருதும் என்றும் அவர் கூறியிருந்தார்.

எனவே, இப்போது அமெரிக்காவின் ஏவுகணையை பயன்படுத்தி ரஷியாவுக்குள் ஆழமாக ஊடுருவி உக்ரைன் தாக்குதல் நடத்தினால் போர் தீவிரமடையும் என அஞ்சப்படுகிறது.

மேலும் செய்திகள்