< Back
உலக செய்திகள்
ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புங்கள் இந்தியாவுக்கு வங்காளதேசம் வேண்டுகோள்
உலக செய்திகள்

ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புங்கள் இந்தியாவுக்கு வங்காளதேசம் வேண்டுகோள்

தினத்தந்தி
|
24 Dec 2024 6:59 AM IST

வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா 4 மாதங்களுக்கு மேலாக இந்தியாவில் தங்கி இருக்கிறார்.

டாக்கா,

வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா 16 ஆண்டுகளாக பிரதமராக இருந்தார். அவரது அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடந்து வந்தது. கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி, மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்தது. இதனால் ஷேக் ஹசீனா வங்காளதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவரது அரசு கவிழ்க்கப்பட்டது. வேறு நாட்டில் அரசியல் புகலிடம் கிடைக்காததால், ஷேக் ஹசீனா 4 மாதங்களுக்கு மேலாக இந்தியாவில் தங்கி இருக்கிறார்.

அதே சமயத்தில், முகமது யூனுஸ் தலைமையில் வங்காளதேசத்தில் இடைக்கால அரசு பதவியேற்றது. ஷேக் ஹசீனா, அவருடைய மந்திரிகள், ஆலோசகர்கள், ராணுவ, சிவில் அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக பல்வேறு குற்றவியல் வழக்குகளும், இனப்படுகொலை குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது. இந்த வழக்குகளில் ஷேக் ஹசீனா உள்ளிட்டோருக்கு எதிராக டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் கைது வாரண்டுகளை பிறப்பித்துள்ளது.

இதற்கிடையே, வழக்குகளை சந்திக்க ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து வரவழைக்க ஏற்பாடு செய்யுமாறு வங்காளதேச வெளியுறவு அமைச்சகத்துக்கு வங்காளதேச உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியது. அதன்பேரில், வங்காளதேச இடைக்கால அரசு, வழக்குகளை சந்திக்க ஷேக் ஹசீனாவை வங்காளதேசத்துக்கு திருப்பி அனுப்புமாறு இந்தியாவுக்கு செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. இத்தகவலை வெளியுறவு விவகார ஆலோசகர் தவுஹித் உசைன் தெரிவித்தார். இந்தியா-வங்காளதேசம் இடையே குற்றவாளிகளை நாடுகடத்தும் ஒப்பந்தம் இருப்பதால், அதன்மூலம் ஷேக் ஹசீனாவை ஒப்படைக்கலாம் என்று வங்காளதேசம் கருத்து தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்