< Back
உலக செய்திகள்
ஆஸ்திரேலியா:  திருடி சென்ற ஹெலிகாப்டர் ஓட்டல் மீது மோதியதில் விமானி கருகி பலி
உலக செய்திகள்

ஆஸ்திரேலியா: திருடி சென்ற ஹெலிகாப்டர் ஓட்டல் மீது மோதியதில் விமானி கருகி பலி

தினத்தந்தி
|
12 Aug 2024 11:33 PM IST

ஆஸ்திரேலியாவில் ஓட்டல் மீது ஹெலிகாப்டர் மோதியதில், உயிரிழந்த விமானியை அடையாளம் காண்பதற்காக தடய அறிவியல் விசாரணைகள் நடந்து வருகின்றன.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவின் வடக்கே சுற்றுலா நகராக கெய்ர்ன்ஸ் நகரம் உள்ளது. இதில், ஹில்டன்ஸ் டபுள் ட்ரீ என்ற ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை இந்த ஓட்டலின் மேற்கூரை மீது ஹெலிகாப்டர் ஒன்று மோதி விபத்தில் சிக்கியது.

இரட்டை இயந்திரம் கொண்ட அந்த ஹெலிகாப்டர், மோதிய வேகத்தில் தீப்பிடித்து கொண்டது. இதனால், கட்டிடத்தின் மேல்பகுதியில் தீப்பிடித்து கொண்டது. இந்த விபத்தில், விமானி சம்பவ இடத்திலேயே கருகி பலியாகி விட்டார்.

இதனை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஓட்டலில் இருந்த நூற்றுக்கணக்கானோர் உடனடியாக பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டனர் என குயின்ஸ்லேண்ட் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில், தரை பகுதியில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

எனினும், 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சைக்கு பின்னர், அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. விமானியை அடையாளம் காண்பதற்காக தடய அறிவியல் விசாரணைகளும் நடந்து வருகின்றன.

ஹெலிகாப்டரின் உரிமையாளர் கூறும்போது, எங்களுடைய விமானி அதனை ஓட்டவில்லை என்றும் ஹெலிகாப்டரை திருடி கொண்டு சென்றுள்ளனர் என்றும் கூறியுள்ளார். அதில் ஒரே ஒரு விமானி தவிர வேறு யாரும் பயணிக்கவில்லை.

மேலும் செய்திகள்