நைஜர் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து.. ஏராளமான பயணிகள் பலி
|வடக்கு நைஜீரியாவில் படகு கவிழ்ந்ததில் ஆற்றில் விழுந்த சுமார் 100 பயணிகளைக் காணவில்லை.
நைஜர்:
நைஜீரியாவின் வடக்கு பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நைஜர் ஆற்றில் சென்றுகொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கோகி மாநிலத்தில் இருந்து அண்டை மாநிலமான நைஜர் நோக்கி சென்ற அந்த படகில் 200-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். படகு கவிழ்ந்ததும் அதில் இருந்த பயணிகள் ஆற்றில் விழுந்து தத்தளித்தனர். நீச்சல் தெரிந்தவர்கள் நீந்தி கரை சேர்ந்தனர்.
உள்ளூரைச் சேர்ந்த டைவிங் குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவசரகால மேலாண்மை நிறுவன மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை முடுக்கி விட்டனர்.
மீட்பு பணியின்போது 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். சுமார் 100 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. எனவே, இந்த விபத்தில் ஏராளமானோர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
படகு மூழ்கியதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் இதுவரை உறுதி செய்யவில்லை. எனினும், அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்றதால் படகு கவிழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது.