இலங்கை அதிபராக பதவியேற்றார் அனுரா குமார திசநாயகே
|இலங்கையின் புதிய அதிபராக அனுரா குமார திசநாயகே இன்று காலை பதவியேற்றார்.
கொழும்பு,
இலங்கையில் 9-வது அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. வாக்குப் பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. 2022-ல் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் அதனால் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு பிறகு நடந்த முதல் அதிபர் தேர்தல் இதுவாகும். இந்த தேர்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே உள்பட 38 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
எனினும் சுயேச்சையாக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கே, ஐக்கிய மக்கள் சக்தி முன்னணி சார்பில் களம் கண்ட எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, பல்வேறு கட்சிகள் அடங்கிய தேசிய மக்கள் சக்தி முன்னணியின் வேட்பாளரான தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே ஆகிய 3 பேருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவியது.
இந்த தோ்தலில் தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளா் அனுரா குமார திசநாயகே (56 வயது) வெற்றி பெற்றாா். எதிா்க்கட்சித் தலைவா் சஜீத் பிரேமதாச இரண்டாவது இடத்தைப் பெற்ற நிலையில், தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்கே 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டாா்.
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் யாருக்கும் பெரும்பான்மை (50 சதவீதத்துக்கும் அதிகம்) கிடைக்காத நிலையில், இலங்கை தோ்தல் வரலாற்றிலேயே முதல்முறையாக 2-வது சுற்று வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்டு வெற்றியாளராக அனுரா குமார திசநாயகே தோ்வு செய்யப்பட்டாா்.
இந்த நிலையில் இலங்கையின் 9-வது அதிபராக அனுரா குமார திசநாயகே இன்று காலை 10 மணிக்கு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு இலங்கையின் தலைமை நீதிபதி ஜயந்த ஜெயசூரியா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். கொழும்புவில் உள்ள அதிபா் செயலகத்தில் எளிமையான முறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பதவியேற்றார். புத்த மத பிக்குகள் புதிய அதிபராக பதவியேற்ற அனுரா குமார திசநாயகேவின் கையில் கயிறு கட்டி வாழ்த்து தெரிவித்தனர்.