< Back
உலக செய்திகள்
இஸ்ரேலை தாக்கினால்... ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
உலக செய்திகள்

இஸ்ரேலை தாக்கினால்... ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

தினத்தந்தி
|
17 Aug 2024 7:13 PM IST

போர்நிறுத்தம், பணய கைதிகள் விடுவிப்புக்கான ஒப்பந்தம் ஏற்பட சிறந்த சந்தர்ப்பம் அமைந்துள்ள சூழலில், ஈரானின் நடவடிக்கை அதனை தடம்புரள செய்யும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

வாஷிங்டன்,

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் ஈரானின் பிரதிநிதியாக பார்க்கப்படும் ஹமாஸ் அமைப்பு இந்த தாக்குதலில் ஈடுபட்டது. இதில், இஸ்ரேல் மக்களில் 1,200-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். சிலர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். இந்த சூழலில், ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே சமீபத்தில் தெஹ்ரானில் வைத்து கொல்லப்பட்டார். இந்த தாக்குதலை இஸ்ரேல் ராணுவத்தினரே நடத்தியிருக்க கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ஆனால், இஸ்ரேல் இதுவரை இதற்கு பொறுப்பேற்கவில்லை. அடுத்து, ஹிஜ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் என்பவரை இஸ்ரேல் தாக்கி படுகொலை செய்தது. இதன் தொடர்ச்சியாக, ஈரான் தலைவர் அயோதுல்லா அலி காமினி, இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை நடத்தும்படி தன்னுடைய படைகளுக்கு உத்தரவிட்டார்.

இதனால், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நேரடி மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து, அந்த பகுதியில் பதற்றம் தொற்றி கொண்டது. எனினும், ஈரான் போரில் நேரடியாக இன்னும் ஈடுபடவில்லை.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் பைடன் நேற்று கூறும்போது, கத்தார் நாட்டில் நடந்த பேச்சுவார்த்தையில், அமெரிக்க மத்தியஸ்த குழுவினர் உள்ளிட்டோர் பங்கு பெற்று 2 நாட்களான நிலையில், இதற்கு முன் இல்லாத வகையில் போர்நிறுத்தம் மற்றும் பணய கைதிகள் விடுவிப்பு ஆகியவற்றுக்கான ஒப்பந்தம் ஏற்படுவதற்கான சிறந்த சந்தர்ப்பம் உள்ளது. இதனால், 10 மாத கால காசா போர் முடிவுக்கு வருவதற்கான சாத்தியமும் காணப்படுகிறது என கூறினார்.

இந்நிலையில், ஹமாஸ் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேலை, ஈரான் தாக்கினால் பேரழிவை எதிர்கொள்ள நேரிடும். அதனுடன் காசா ஒப்பந்தம் ஏற்படுவதற்கான சாத்தியமும் தடம்புரள கூடும் என ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது.

போர்நிறுத்தம் மற்றும் பணய கைதிகள் விடுவிப்பு ஆகியவற்றுக்கான ஒப்பந்தம் ஏற்படுவதற்கான சிறந்த சந்தர்ப்பம் அமைந்துள்ளது என நாம் நினைத்து கொண்டு இருக்கும் சூழலில், அதனை அடிப்படையில் இருந்து தடம்புரள செய்யும் வகையில் ஈரான் ஏதேனும் மேற்க்கொண்டால், அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஈரானின் பிரதிநிதியாக உள்ள ஹமாஸ் அமைப்பே, கடந்த அக்டோபர் 7-ந்தேதி போரை தொடங்கியது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்