இஸ்ரேல் மீது பல மாதங்களுக்கு பின்... ஹமாஸ் அமைப்பு பெரிய அளவில் ஏவுகணை தாக்குதல் - வீடியோ
|இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் 4 மாதங்களுக்கு பின் முதன்முறையாக ராக்கெட் தாக்குதல் பற்றிய எச்சரிக்கை ஒலி கேட்கிறது.
டெல் அவிவ்,
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு திடீரென கடுமையான தாக்குதல் நடத்தியது. எல்லை பகுதியில் இசை கச்சேரி நடந்த பகுதி உள்பட பல்வேறு இடங்களில் புகுந்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டது. துப்பாக்கி சூடு நடத்தி ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தது. பின்னர் நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது.
எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. இதற்காக காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகிறது. ரபா நகரை முற்றுகையிட்டு உள்ளது. நிவாரண உதவி பெறுவதற்காக செல்லும் வழியையும் அடைத்தது.
இந்த போரால், 35,984 பேர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். 80,643 பேர் காயமடைந்து உள்ளனர் என்று காசா சுகாதார அதிகாரிகள் இன்று தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில், இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகர் மீது பல மாதங்களுக்கு பின் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஏவுகணைகளை கொண்டு பெரிய அளவில் தாக்குதல் நடத்தியுள்ளது. காசா முனை பகுதியில் இருந்து டெல் அவிவ் மீது அடுத்தடுத்து ராக்கெட்டுகள் ஏவப்பட்டன.
இந்த தாக்குதலுக்கு ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின், அல்-காசம் பிரிகேட்ஸ் என்ற கிளை அமைப்பு பொறுப்பேற்று கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து, டெல் அவிவ் நகரம் முழுவதும் இஸ்ரேல் ராணுவம், எச்சரிக்கை ஒலியை எழுப்பியது. மத்திய இஸ்ரேல் பகுதி முழுவதும் இந்த ராக்கெட் தாக்குதல் பற்றிய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது.
பொதுமக்களை படுகொலை செய்த யூதர்களுக்கு பதிலடியாக ராக்கெட்டுகள் ஏவப்பட்டு உள்ளன என இந்த தாக்குதல் பற்றி அல்-காசம் பிரிகேட்ஸ் அமைப்பு டெலிகிராம் ஊடகத்தில் தெரிவித்து உள்ளது. 4 மாதங்களுக்கு பின் முதன்முறையாக ராக்கெட் தாக்குதல் பற்றிய எச்சரிக்கை ஒலி டெல் அவிவ் நகரில் கேட்கிறது.
இதுபற்றிய வீடியோவும் வெளிவந்துள்ளது. இதனால், தெருக்களில் நடந்து சென்ற மக்கள் உடனடியாக பாதுகாப்பு தேடி ஓடுகின்றனர். இந்த எச்சரிக்கை ஒலிக்கான காரணம் பற்றி இஸ்ரேல் ராணுவம், உடனடியாக எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால், இஸ்ரேல் போரை தீவிரப்படுத்த கூடிய சாத்தியம் அதிகரித்து உள்ளது.