பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் ஆப்கான் படைகள்.. இரு நாடுகளிடையே பதற்றம்
|ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
காபுல்,
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பல்வேறு கிளர்ச்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானி தலிபான் என்ற கிளர்ச்சி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு தங்கள் நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்துவதாகவும், இது பயங்கரவாத அமைப்பு என்றும் பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது. மேலும், இந்த அமைப்பை குறிவைத்து அவ்வப்போது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் கடந்த 25-ந்தேதி வான்வழி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 46 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் அனைவரும் பொதுமக்கள் எனவும் இதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் எனவும் தகவல் வெளியானது.
பாகிஸ்தான் ராணுவம் நடத்திய இந்த வான்வழி தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன், இந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தப்படும் எனவும் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் தலிபான் படைகள் பாகிஸ்தானில் பல இடங்களில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் - தாலிபான்கள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்துள்ளதும், இதில் 19 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால், இருநாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.