சோமாலியாவில் ராணுவ வாகனத்தை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்: 8 வீரர்கள் பலி
|ராணுவ வீரர்களின் வாகனம் மீதான தாக்குதலுக்கு அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.
மொகாதிசு,
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. எனவே அவர்களை கட்டுப்படுத்த அரசாங்கம் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. எனினும் தாக்குதல் சம்பவம் தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம், சோமாலியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள பைடோவா நகரில் இருந்து பெர்டேல் நகருக்கு ராணுவ வீரர்கள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களது வாகனத்தை குறிவைத்து சாலையோரத்தில் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டை பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்தனர். இதில் ஒரு வாகனம் வெடித்து சிதறியது.
இந்த தாக்குதலில் ராணுவ தளபதி முகமது தேரே உள்பட 8 பேர் பலியாகினர். மேலும் 11 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த தாக்குதலுக்கு அல் கொய்தாவுடன் தொடர்புடைய அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.