< Back
உலக செய்திகள்
அசாதாரண சூழல் நிலவும் சிரியாவில் இருந்து 75 இந்தியர்கள் மீட்பு
உலக செய்திகள்

அசாதாரண சூழல் நிலவும் சிரியாவில் இருந்து 75 இந்தியர்கள் மீட்பு

தினத்தந்தி
|
11 Dec 2024 9:11 AM IST

அசாதாரண சூழல் நிலவும் சிரியாவில் இருந்து 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

டமாஸ்கஸ்,

சிரியாவில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. அதிபர் பஷார் அல்-ஆசாத் தலைமையிலான அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான சண்டையில், சில முக்கிய நகரங்கள் கிளர்ச்சியாளர்கள் வசம் சென்றன. கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் மோதல் ஏற்படாத நிலையில், கடந்த வாரம் மீண்டும் கிளர்ச்சி வெடித்தது. அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து முன்னேறி தலைநகர் டமாஸ்கசையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 50 ஆண்டு கால ஆசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அதிபர் ஆசாத் பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறி ரஷியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனால் சிரியாவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அசாதாரண சூழல் நிலவும் சிரியாவில் இருந்து 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, லெபனான் சென்றுள்ளதாகவும், அங்கிருந்து வணிக விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு திரும்பவுள்ளனர் என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்டவர்களில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 44 ஜைரீன்கள் அடங்குவர். இவர்கள் சைதா ஜைனாபில் சிக்கியிருந்தனர். சிரியாவில் சிக்கித் தவித்த இந்தியர்களின் கோரிக்கைகள் மற்றும் அங்குள்ள பாதுகாப்பு நிலைமை குறித்த மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் டமாஸ்கஸ் மற்றும் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகங்கள் இணைந்து இந்த மீட்பு பணிகளை மேற்கொண்டதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக 75 பேர் மீட்கப்பட்டுள்ள போதிலும், இன்னும் சில இந்தியர்கள் சிரியாவில் உள்ளனர். அவர்கள் டமாஸ்கசில் உள்ள தூதரகத்துடன் +963 993385973 என்ற உதவி எண்ணிலும், வாட்ஸ்அப்பிலும், மற்றும் hoc.damascus@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் தொடர்பில் இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்