பராமரிப்பு இல்லங்களில் 70 ஆண்டுகளாக நேர்ந்த கொடுமை; பகிரங்க மன்னிப்பு கோரிய நியூசிலாந்து அரசு
|பராமரிப்பு இல்லங்களில் 70 ஆண்டுகளாக நேர்ந்த கொடுமைகளுக்காக நியூசிலாந்து அரசு பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது.
வெல்லிங்டன்,
நியுசிலாந்தில் கடந்த 1950-ம் ஆண்டு முதல் அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வந்த பராமரிப்பு இல்லங்களில், சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான சிறுவர்களும், பெண்களும் கொடூர சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக பாலியல் துன்புறுத்தல், கருத்தடை, மின்சாரம் பாய்ச்சுதல் உள்ளிட்ட பல கொடுமைகள் நிகழ்ந்ததாகவும், 1970-களில் இந்த துன்புறுத்தல்கள் உச்சத்தை எட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக அரசு தரப்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. மொத்தம் 53 லட்சம் மக்கள் தொகையை கொண்ட நியூசிலாந்து நாட்டில், பராமரிப்பு இல்லங்களில் துன்புறுத்தல்களை அனுபவித்து உயிர்பிழைத்தாக கூறப்படும் சுமார் 2,300 பேரிடம் விசாரணை குழுவினர் நேரடியாக விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், நியூசிலாந்தின் பூர்வீக பழங்குடியான மவோரி இனத்தைச் சேர்ந்த மக்களே உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிக துன்புறுத்தல்களுக்கு ஆளாகி உள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை குழு சமர்ப்பித்த இறுதி அறிக்கையில், நியூசிலாந்து அரசுக்கு 138 பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் அந்த அறிக்கையில், கடந்த 1950-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை அரசு பராமரிப்பு இல்லங்களில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான பெண்களும், குழந்தைகளும் துன்புறுத்தப்பட்டுள்ளனர் என்றும், அரசு இல்லங்களில் நிகழ்ந்த கொடூரங்களுக்கு நியூசிலாந்து அரசும், மத தலைவர்களும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரசு பராமரிப்பு இல்லங்களில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்ந்த கொடூரங்களுக்காக நியூசிலாந்தின் தற்போதைய அரசு மற்றும் முந்தைய அரசுகளின் சார்பில் பகிரங்க மன்னிப்பு கோருவதாக அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்துள்ளார். மேலும் விசாரணை குழு அளித்த 28 பரிந்துரைகளை நியூசிலாந்து அரசு நிறைவேற்றி உள்ளதாக குறிப்பிட்ட அவர், அடுத்த ஆண்டு முதல் நவம்பர் 12-ந்தேதி தேசிய நினைவு தினமாக கடைபிடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.