ஜப்பானில் சைக்கிள் ஓட்டும்போது செல்போன் பேசினால் 6 மாதம் சிறை
|ஜப்பானில் சைக்கிள் ஓட்டும்போது செல்போனில் பேசினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
டோக்கியோ,
பைக், கார் போன்றவற்றை ஓட்டிச்செல்லும் போது செல்போன் பேசினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உள்ளது. கவன சிதறல் ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் இத்தகைய போக்குவரத்து விதிகளின் படி இத்தகைய அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் ஜப்பானில் சைக்கிள் ஓட்டும் போது செல்போனில் பேசினால் கூட 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சைக்கிளில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்வதால் அதை கட்டுப்படுத்தும் விதமாக இந்த அதிரடி உத்தரவை ஜப்பான் அரசு பிறப்பித்துள்ளது.
சைக்கிள் ஓட்டும்போது செல்போன் பேசவோ, இணையத்தை பயன்படுத்தவோ கூடாது. இதனை மீறுபவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை அல்லது சுமார் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இதுதவிர மதுபோதையில் சைக்கிள் ஓட்டினாலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது சுமார் ரூ.2¾ லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் போக்குவரத்து விதிமுறைகளில் திருத்தத்தை ஜப்பான் அரசு கொண்டு வந்துள்ளது.