ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேல் வீரர்கள் 4 பேர் பலி; 65 பேர் காயம்
|ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் இஸ்ரேல் வீரர்கள் 4 பேர் பலியாகி உள்ளனர்.
டெல் அவிவ்,
காசாவுக்கு எதிரான போரில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கி வருகிறது. இதற்கு, இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் இஸ்ரேல் வீரர்கள் 4 பேர் பலியானார்கள். இவர்கள் தவிர, 65 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
இதுபற்றி இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்டு உள்ள தகவலில், ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு ஏவிய ஆளில்லா விமானம் ஒன்று ராணுவ தளத்தின் மீது தாக்கியது. சம்பவத்தில், இஸ்ரேல் பாதுகாப்பு படையை சேர்ந்த 4 வீரர்கள் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தின் துயரை ராணுவம் பகிர்ந்து கொள்கிறது. அவர்களுக்கு தொடர்ந்து உறுதுணையாக இருப்போம் என பதிவிட்டு உள்ளது. புரளிகளை மற்றும் காயமடைந்த நபர்களின் பெயர்களை பரப்ப வேண்டாம் என்றும் அவர்களின் குடும்பத்தினரை மதிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவித்து உள்ளது.