கனடாவில் கார் விபத்து.. 4 இந்தியர்கள் உயிரிழப்பு
|கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் இந்தியர்கள் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானது.
ஒட்டாவா:
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் டொரன்டோ நகரில் கடந்த வியாழக்கிழமை அதிவேகமாக சென்றுகொண்டிருந்த கார், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இரும்பு தடுப்பில் மோதி பின்னர் பில்லரில் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் கார் தீப்பற்றி எரிந்தது.
இந்த விபத்தில் காரில் இருந்த 4 இந்தியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த ஒரு பெண்ணை, அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விபத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் விபத்து குறித்த தகவல்களை விசாரணை அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம் என்றும், டிரைவர்கள் தங்கள் வாகனங்களில் உள்ள டேஷ்போர்டு கேமரா பதிவுகள் இருந்தால் அதை வழங்கலாம் என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
கார் விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்ததற்கு டொரன்டோவில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதாகவும் கூறி உள்ளது.