லெபனானில் இஸ்ரேல் நடத்திய வெவ்வேறு வான்வழி தாக்குதலில் 32 பேர் பலி
|லெபனானில் இஸ்ரேல் நடத்திய வெவ்வேறு வான்வழி தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர்.
பெய்ரூட்,
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.
ஓராண்டுக்கு மேலாக நடந்து வரும் மோதலில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், லெபனானில் இஸ்ரேல் நடத்திய வெவ்வேறு வான்வழி தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டதாகவும், சிலர் காயமடைந்ததாகவும் லெபனான் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
லெபனான் தேசிய செய்தி நிறுவன கூற்றுப்படி, மவுண்ட் லெபனானில் இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பால்ச்மே நகரில் இருவர் காயமடைந்தனர். மேலும் 12 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல சோப் மாவட்டத்தில் உள்ள ஜோன் கிராமத்தில் 8 பேர் காயமடைந்தனர். தெற்கு டெபாஹ்தா பகுதியில் நடந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர்.
டயர் மாவட்டத்தில் உள்ள மன்சூரி கிராமத்தில் நடத்த மற்றொரு தாக்குதலில் ஒரு துணை டாக்டர் கொல்லப்பட்டார் மற்றும் ஒரு சிவில் பாதுகாப்பு உறுப்பினர் காயமடைந்தார். அதேபோல, ஹெர்மலில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர், மற்றொருவர் டயர் அருகிலுள்ள புர்ஜ் எல்-ஷெமாலியில் கொல்லப்பட்டார். மேலும் ரூமின் கிராமத்தில் இரண்டு பேரும், மற்றொரு தாக்குதலில் 2 பேரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.