இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் அடுக்குமாடி கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து 30 உடல்கள் மீட்பு
|கட்டிட இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர்.
பெரூட்,
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.
அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. அதேபோல், லெபானானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது ஓராண்டுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது.
அதேவேளை, ஹமாஸ் ஆயுதக்குழு, ஹிஸ்புல்லா அமைப்பு, ஈராக்கில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்கள், ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. லெபனானில் செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பினரை குறிவைத்தும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானுக்குள் புகுந்தும், வான்வழி மூலமாகவும் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், லெபனானின் பார்ஜா நகரில் நேற்று இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அங்கு இருந்த ஒரு அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் இருந்து 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இடிபாடுகளின் அடியில் இன்னும் எத்தனை பேர் சிக்கியிருக்கிறார்கள் என்பதும் எத்தனை பேர் உயிர் பிழைத்தனர் என்பதும் தெளிவாக தெரியவில்லை என்று சிவில் பாதுகாப்பு அதிகாரி முஸ்தபா தனாஜ் கூறியுள்ளார். இந்த இடிபாடுகளின் அடியில் வேறு யாரும் இல்லை என்று நாங்கள் நம்புகிறோம், ஆனால் இன்னும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.