< Back
உலக செய்திகள்
டிரம்புக்கு பதிலாக... குடியரசு கட்சியின் முன்னாள் அதிபர் பணியாளர்கள் 200 பேர் கமலா ஹாரிசுக்கு ஆதரவு
உலக செய்திகள்

டிரம்புக்கு பதிலாக... குடியரசு கட்சியின் முன்னாள் அதிபர் பணியாளர்கள் 200 பேர் கமலா ஹாரிசுக்கு ஆதரவு

தினத்தந்தி
|
28 Aug 2024 9:24 AM IST

அமெரிக்காவில் 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின்போதும், டொனால்டு டிரம்புக்கு இந்த குழுவினர் எதிர்ப்பை தெரிவித்து இருந்தனர்.

வாஷிங்டன் டி.சி.,

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இதேபோன்று, ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

இந்த சூழலில், முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷிடம் இதற்கு முன்பு பணியாளர்களாக வேலை செய்த குடியரசு கட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் வெளிப்படையான கடிதம் ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதில், அதிபர் தேர்தலில், துணை அதிபராக பதவி வகித்து வரும் கமலா ஹாரிசுக்கு தங்களுடைய ஆதரவை வெளிப்படுத்தி உள்ளனர்.

அவர்கள், குடியரசு கட்சியை சேர்ந்த அதிபர் வேட்பாளரான டிரம்புக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு பதிலாக, ஜனநாயக கட்சியின் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், குடியரசு கட்சியினர் மற்றும் பழமைவாதிகளான தனிநபர்களும் கமலா ஹாரிசை ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

அந்த கடிதத்தில், முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ், மறைந்த செனட் உறுப்பினர் ஜான் மெக்கெயின் மற்றும் அப்போது கவர்னராக இருந்த மிட் ரோம்னி ஆகியோர் 4 ஆண்டுகளுக்கு முன் ஒன்றாக சேர்ந்து, சக குடியரசு கட்சியை சேர்ந்தவர்களை எச்சரித்தனர்.

டிரம்ப்பை அதிபராக மீண்டும் தேர்ந்தெடுப்பது நம்முடைய நாட்டுக்கு பேரிடராக அமைந்து விடும் என தெரிவித்தனர். இந்த சூழலில் நாம் மீண்டும் ஒன்றிணைந்து உள்ளோம். 2020-ம் ஆண்டு மேற்கொண்ட அறிவிப்புகளை மீண்டும் செயல்படுத்துவோம்.

முதன்முறையாக கமலா ஹாரிசுக்கு வாக்களிக்கிறோம் என கூட்டாக அறிவிக்கிறோம் என அந்த கடிதம் தெரிவிக்கின்றது. கமலா ஹாரிசுடன் கொள்கை அடிப்படையிலான வேற்றுமைகள் உள்ளன. ஆனால் அதற்கான மாற்றாக உள்ளவரை ஏற்று கொள்ள முடியாது என்றும் கடிதம் தெரிவித்து உள்ளது.

2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின்போதும், இந்த குழுவினர் டொனால்டு டிரம்புக்கு எதிர்ப்பை தெரிவித்து இருந்தனர். இந்த சூழலில், கமலா ஹாரிசுடன் விவாதம் நடத்த டிரம்ப் ஒப்பு கொண்டிருக்கிறார். அதற்கு சில நிபந்தனைகள் மற்றும் விதிகளையும் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்