பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பாதுகாப்புப்படை வீரர்கள் பலி
|பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பாதுகாப்புப்படை வீரர்கள் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.
இஸ்லாமாபாத்,
ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டிய பாகிஸ்தானின் தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஜன்னடா என்ற இடத்தில் வெடிகுண்டு செயலிழக்கும் இடத்தில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர் அந்த பகுதியை சீல் வைத்து தீவிரவாதிகளை தேடி வருகின்றனர். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புப்படையினர் தெரிவித்தனர்.
மற்றொரு சம்பவத்தில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் அலிகேல் பகுதியில் உள்ள மசூதியில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த பாதுகாப்புப்படை வீரர் ஒருவரை தீவிரவாதிகள் கடத்தினர். மாகாணத்தின் தெற்கு பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக தீவிரவாதிகளால் போலீஸ் மற்றும் எப்.சி. பாதுகாப்புப்படையினர்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.