வங்காளதேசத்தில் மேலும் 2 இந்து சாமியார்கள் கைது
|வங்காளதேசத்தில் சிறையில் உள்ள சின்மோய் கிருஷ்ணாவுக்கு உணவு வழங்க சென்ற இந்து சாமியார்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
டாக்கா,
வங்காளதேசத்தில் இஸ்கானின் முன்னாள் உறுப்பினரான சின்மோய் கிருஷ்ண தாஸ் இந்து பேரணி ஒன்றில் வங்காளதேச கொடியை அவமதித்து விட்டார் என தேச துரோக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதனை அடுத்து, அவர் கடந்த 25-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுவிக்க கோரி போராட்டங்களும் நடத்தப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, இந்து கோவில்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. சிறுபான்மை மக்களுக்கு எதிராக அராஜகங்கள் நடந்து வருகின்றன. இந்துக்களின் கடைகள், வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. அவர்களின் சொத்துகளுக்கு தீ வைத்தும், சிறுபான்மையினரின் சொத்துகளை சூறையாடியும் வருகின்றனர்.
இந்த தாக்குதல்களில், பலர் காயமடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து, மத்திய வெளிவிவகார அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்தியில், இந்துக்களை பாதுகாக்கும்படி வங்காளதேச அரசை வலியுறுத்தி உள்ளது.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சாமியார் சின்மோய் கிருஷ்ணாவுக்கு உணவு, மருந்து மற்றும் பணம் ஆகியவற்றை கொடுப்பதற்காக ருத்ரபிரோதி கேசப் தாஸ் மற்றும் ரங்கநாத் சியாம சுந்தர் ஆகிய 2 சாமியார்கள் சென்றுள்ளனர். அப்போது அந்நாட்டு போலீசாரால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதுபற்றி போலீசார் கூறும்போது, நடந்து வரும் விசாரணையில் அவர்கள் சந்தேகத்திற்குரிய நபர்களாக உள்ளனர். அதனால், கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றனர். இதுபற்றி புரொபோர்தக் சங்கத்தின் முதல்வர் ஸ்வதந்திரா கவுரங்கா தாஸ் கூறும்போது, சிறையில் சின்மோய் கிருஷ்ணாவுக்கு உணவு வழங்க சென்றபோது, எங்களுடைய உறுப்பினர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர் என குரல் பதிவு ஒன்றின் வழியே தெரிந்து கொண்டேன்.
கொத்வாலி காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டோம் என அவர்கள் தெரிவித்தனர். மற்றொரு குரல் பதிவு, அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளது.