இங்கிலாந்தில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதல்; 5 பேர் பலி
|இங்கிலாந்தில் ஏற்பட்ட விபத்தில், கேம்பிரிட்ஜ்ஷைர் பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
லண்டன்,
இங்கிலாந்து நாட்டின் கம்பிரியா நகரில், எம்6 என்ற மோட்டார் வழி சாலையில், கார் ஒன்று தவறான திசையில் சென்றுள்ளது. இதில், அந்த கார், மற்றொரு கார் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. ஸ்கோடா மற்றும் டொயட்டோ ரக கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் சிக்கி 5 பேர் பலியானார்கள்.
இதுபற்றி கம்பிரியா போலீசார் கூறும்போது, விபத்தில், கேம்பிரிட்ஜ்ஷைர் பகுதியை சேர்ந்த ஸ்கோடா ரக காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுதவிர, 42 வயது ஆண், 33 வயது பெண், 7 மற்றும் 15 வயதுடைய 2 சிறுவர்களும் விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளனர். டொயட்டோ காரில் வந்த இவர்கள் 4 பேரும் கிளாஸ்கோ பகுதியை சேர்ந்தவர்கள். எனினும், இவர்கள் அனைவரும் ஒரே குடும்ப உறுப்பினர்களா? என்பது அடையாளம் காணப்படவில்லை என தெரிவித்தனர்.
விபத்தில் பாதிக்கப்பட்ட 7 வயதுடைய மற்றொரு சிறுவன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான். அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. சம்பவ பகுதியில் உதவி புரிந்த பொதுமக்களுக்கு போலீசார் நன்றி தெரிவித்து கொண்டனர்.