வடக்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் டாக்டர் உள்பட 16 பேர் பலி
|வடக்கு காசாவை முற்றுகையிட்டு, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், அல்-ஆலி அரப் மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் மற்றும் ஒரு டாக்டர் உள்பட 16 பேர் பலியாகி உள்ளனர்.
டெல் அவிவ்,
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.
போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்கும் முயற்சியாக, தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், வடக்கு காசாவை முற்றுகையிட்டு, இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதில் அல்-ஆலி அரப் மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் மற்றும் ஒரு டாக்டர் உள்பட 16 பேர் பலியாகி உள்ளனர்.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கையால் பெய்த் ஹனூன், பெய்த் லாஹியா மற்றும் ஜபாலியா ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் பசி, பட்டினியால் அவதிப்படுகின்றனர். 70 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் இந்த பகுதியை ஆக்கிரமித்து, தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது. இதனால், ஐ.நா. அமைப்பால் நிவாரண பணிகளை மேற்கொள்ள முடியாத சூழல் உள்ளது. அதன் கோரிக்கையை இஸ்ரேல் மீண்டும் நிராகரித்து உள்ளது.
காசா மீது நடத்தப்பட்டு வரும் இஸ்ரேலின் இந்த தாக்குதலால், இதுவரை 45,097 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்து 7 ஆயிரத்து 244 பேர் காயமடைந்து உள்ளனர்.