தெற்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழப்பு
|தெற்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.
காசா,
காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
இதற்கு பதிலடியாக காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் அரசு போர் தொடுத்தது. ஓராண்டை கடந்து நடந்து வரும் மோதலில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழிக்கும் வரை போர்நிறுத்தம் ஏற்படாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், காசாவின் தெற்கு பகுதியில் உள்ள பெனி சுஹைலா நகரில், நேற்று நள்ளிரவு இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 6 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட மொத்தம் 15 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போரில் பொதுமக்களின் உயிரிழப்புகளுக்கு ஹமாஸ் அமைப்பினரே காரணம் என்றும், அவர்கள் பொதுமக்களின் இருப்பிடங்களை முகாம்களாக பயன்படுத்துகின்றனர் என்றும் இஸ்ரேல் ராணுவம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.