< Back
உலக செய்திகள்
Coal Mine in Pakistans Balochistan
உலக செய்திகள்

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு தாக்கி 11 பேர் பலி

தினத்தந்தி
|
5 Jun 2024 11:11 AM IST

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு கசிந்து 11 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் ஏராளமான சட்ட விரோத சுரங்கங்கள் செயல்படுகின்றன. இந்த சுரங்கங்கள் அவ்வப்போது இடிந்து விபத்து ஏற்படுகிறது. எனவே இதனை தடுக்க அரசாங்கம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறது.

இந்தநிலையில் பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரில் தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் செயல்படுகிறது. இங்கு வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

சுமார் 1,500 அடி ஆழத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த சுரங்கத்தில் திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டது. சுரங்கத்தின் மற்ற பகுதிகளுக்கும் இந்த விஷவாயு வேகமாக பரவியது.

இதனால் அங்கிருந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்தனர். தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு சென்ற அவர்கள் சுரங்கத்துக்குள் முதலில் தூய காற்றை செலுத்தினர்.

இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது சுரங்க மேலாளர், ஒப்பந்ததாரர் உள்பட 11 பேர் மயங்கி கிடந்தனர். மீட்பு படையினர் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர்கள் அனைவரும் மூச்சுத்திணறி இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சுரங்கத்துக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்