பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை...?
|தமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் தென் கிழக்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று பெங்கல் புயலாக மாறியபின் நாளை நள்ளிரவு அல்லது நாளை மறுநாள் தமிழக கடலோர பகுதிகளை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வங்கக்கடலில் உருவாக உள்ள'பெங்கல் புயல்' சென்னையை நெருங்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பெங்கல் புயல் சென்னை - புதுச்சேரி இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது பலத்த தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சூழலில் வங்கக் கடலில் உருவாக உள்ள பெங்கல் புயல் கரையை கடக்கும் முன்னரே வலுவிழக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி பெங்கல் புயல் உருவான பிறகு வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக, இன்று கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அந்த இரண்டு மாவட்டங்களில் அதிகனமழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.