இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..? வெளியான தகவல்
|திருச்சி, சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் கடந்த 15-ந் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியது. அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த 15-ந் தேதி சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிக கன மழை பெய்தது. இந்த சூழலில் இன்றும், நாளையும் வடதமிழக கடலோரப் பகுதிகளையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.