தமிழகத்தில் எங்கெங்கு அதி கனமழைக்கு வாய்ப்பு..? - பாலச்சந்திரன் விளக்கம்
|அந்தமானில் வரும் 15-ம் தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் எங்கெங்கு அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்பது குறித்த கேள்விக்கு வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு உள்பட 16 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை தென் தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழை இயல்பை விட 16 விழுக்காடு அதிகம் பெய்துள்ளது. வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுகுறைந்த பின் படிப்படியாக மழை குறையும். வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரை 47 செ.மீ. பதிவாகி உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியின் இயல்பு காரணமாக மழை விட்டு விட்டு பெய்கிறது. காற்றில் அதிக ஈரப்பதம் இருப்பதால் பனிமூட்டம் போல் காணப்படுகிறது
வரும் 15-ம் தேதி அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டுள்ளது.
தற்போதுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்த பிறகு தமிழகத்தில் மீண்டும் மழை இருக்கும். பெஞ்சல் புயலின் திசையை சரியாக கணித்தோம். ஆனால் திறனில் மாற்றம் ஏற்பட்டது. உலகம் முழுவதும் வானிலை கணிப்பில் தவறு ஏற்படுகிறது.
வானிலை பலவிதமான காரணிகளை கொண்டிருப்பதால் துல்லியமாக கணிக்க இயலாது. இன்றைய சூழலில் புயல், கனமழை போன்றவற்றை கணிப்பது குறித்து முழுமையான அறிவியல் இல்லை. செயற்கைக்கோள், கணினி மாதிரிகளை வைத்தே வானிலை நிலவரங்களை கூறுகிறோம். புயலுக்குள் ஆய்வு விமானங்களை செலுத்தி விவரங்களை பெற்றுக் கூட வானிலை கணிப்பானது செய்யப்படுகிறது. ஆனால் அதுவும் சில நேரங்களில் தவறாகி விடுகிறது. தொழில்நுட்பத்தை வைத்து மட்டுமே வானிலையை துல்லியமாக கணிக்க முடியாது, தொழில்நுட்பத்துடன் அறிவியலும் மேம்பட வேண்டும்" என்று அவர் கூறினார்.
முன்னதாக தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்திருந்தது. இதன்படி
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
நெல்லை,
தூத்துக்குடி,
தென்காசி
ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
சென்னை,
செங்கல்பட்டு,
திருவள்ளூர்,
காஞ்சிபுரம்,
விழுப்புரம்,
கடலூர்,
மயிலாடுதுறை,
தேனி,
மதுரை,
சிவகங்கை,
விருதுநகர்,
ராமநாதபுரம்,
கன்னியாகுமரி,
திருவாரூர்,
நாகை,
தஞ்சாவூர்,
புதுக்கோட்டை
மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
ராணிப்பேட்டை,
திருவண்ணாமலை,
கள்ளக்குறிச்சி,
அரியலூர்,
பெரம்பலூர்,
திருச்சி,
கரூர்,
திண்டுக்கல்,
திருப்பூர்,
கோவை