தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
|தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று உருவாக வாய்ப்பு உள்ளது.
இது தொடர்ந்து வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை, நாளை மறுதினம் புதுச்சேரி, தமிழகத்தின் வட மாவட்டங்கள், தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளில் நிலவக்கூடும். இதன் காரணமாக இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.