பெஞ்சல் புயலின் நகரும் வேகம் குறைந்தது
|சென்னைக்கு தென்கிழக்கில் 210 கிமீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.
சென்னை,
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக வலுவடைந்து நேற்று பிற்பகல் புயலாக மாறியது. இந்த புயலுக்கு 'பெஞ்சல்' (Cyclone FENJAL) என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெஞ்சல் புயலின் நகரும் வேகம் குறைந்துள்ளது. அதன்படி, 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில், அதன் வேகம் 7 கி.மீ ஆக குறைந்துள்ளது. கடந்த 6 மணி நேரமாக 7 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னைக்கு தென்கிழக்கில் 210 கிமீ தொலைவிலும், நாகையில் இருந்து 230 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 210 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயல், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகே இன்று பிற்பகலில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.