கடலூர் உள்பட 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்
|தற்போது 5 மாவட்டங்களுக்கும் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை,
வங்கக்கடலில் சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்து இலங்கை மற்றும் டெல்டா கடலோரப் பகுதிகளையொட்டி நிலை கொண்டு இருந்தது.
இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று முற்பகலில் புயலாக மாறக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன் நகரும் வேகம் குறைந்ததால், புயலாக உருவாகுவதில் தாமதம் ஆகியது. மழையின் தாக்கமும் குறைந்தது. இதனால், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டு இருந்த அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையையும் ஆய்வு மையம் திரும்ப பெற்றது.
தற்போது 5 மாவட்டங்களுக்கும் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.