சென்னை
லைவ் அப்டேட்ஸ்: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று "ரெட் அலர்ட்": கனமழை நீடிப்பு
|சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
Live Updates
- 16 Oct 2024 1:00 AM IST
கனமழை காரணமாக சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சில ரெயில்கள் ஆவடி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆவடி ரெயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் குவிந்த நிலையில், ரெயில்கள் 9 மணிக்கு வர வேண்டிய ரெயில் இன்னும் வரவில்லை. இதனால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
- 15 Oct 2024 10:22 PM IST
கனமழையை முன்னிட்டு மீட்பு பணிக்கு முப்படைகளும் தயார் நிலையில் உள்ளன என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
- 15 Oct 2024 9:32 PM IST
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது வரும் 17ம் தேதி அதிகாலை புதுச்சேரி - நெல்லூர் இடையே சென்னைக்கு அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 15 Oct 2024 9:29 PM IST
சென்னை எழிலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மழை நிலவரம், மீட்பு நிவாரண நடவடிக்கைகள் குறித்தும், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர் இருப்பு விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
- 15 Oct 2024 9:26 PM IST
கனமழை எதிரொலியால் தருமபுரி, கிருஷ்ணகிரியில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- 15 Oct 2024 9:10 PM IST
கனமழை காரணமாக கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- 15 Oct 2024 8:47 PM IST
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
தொடர் மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் சி.பழனி உத்தரவிட்டுள்ளார்.
- 15 Oct 2024 8:36 PM IST
சோழவரம், செங்குன்றத்தில் 23 செ.மீ மழை பதிவு
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக மணலி,சோழவரம், செங்குன்றத்தில் தலா 23.செ.மீ மழை பதிவாகி உள்ளது.ஆவடி 22 செ.மீ. தாமரைப்பாக்கம் 11 செ.மீ, பொன்னேரி 10 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- 15 Oct 2024 8:18 PM IST
சென்னையில் 13 விமானங்கள் ரத்து
கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 13 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மஸ்கட், புவனேஸ்வர், விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வரவிருந்த விமானங்கள் மற்றும் சிங்கப்பூர், கோவை, டெல்லி, கொச்சி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லவிருந்த விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- 15 Oct 2024 7:54 PM IST
வேளச்சேரியில் பல இடங்களில் மின் தடை
மீண்டும் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை வேளச்சேரியில் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் உள்ள மக்கள் அவதி அடைந்துள்ளனர். தரமணியில் கனமழை பெய்து வரும் நிலையில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.