< Back
வானிலை
தென்மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
வானிலை

தென்மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தினத்தந்தி
|
26 Oct 2024 2:37 AM IST

தென்மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் உருவான டானா புயல் நேற்று அதிகாலை ஒடிசாவில் தீவிர புயலாக கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடந்த போது, அரபிக்கடல் பகுதியில் நிலவி வந்த கீழடுக்கு சுழற்சியில் இருந்து மேற்கு காற்றை ஈர்த்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருந்தது.

இதன் தொடர்ச்சியாக தெற்கு கேரள கடற்கரையையொட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன்காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழையும், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

டானா புயல் கரையை கடந்தாலும், அதன் நிகழ்வுகள் தொடர்ந்து இருக்கும் என்பதால், நாளை மறுதினம் (திங்கட்கிழமை) வரை தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.

அதன் பின்னர், அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந்தேதி வரை மழைக்கான வாய்ப்பு சற்று குறையும். 1-ந்தேதிக்கு பிறகு கிழக்கு காற்று வீசத் தொடங்கும் எனவும், அது தென் இந்திய பகுதிகள் முழுவதும் பரவுவதற்கு 4-ந்தேதி வரை நீடிக்கலாம் எனவும், அதனைத் தொடர்ந்து 5-ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்