பாம்பனில் 6 மணி நேரத்தில் 25 செ.மீ மழை பதிவு
|தமிழக கடலோர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
ராமநாதபுரம்,
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக வங்கக்கடலில் வருகிற 23-ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதையடுத்து தமிழக கடலோர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று இரவு முதல் நல்ல மழை பெய்து வருகிறது.
ராமேஸ்வரம். தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகள், தாழ்வான பகுதிகள் என பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதேபோல் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் 4 ரதவீதிகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கியது. குறிப்பாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பஸ் நிலையம், அக்ரஹாரம் ரோடு, கேணிக்கரை, மதுரையார் வீதி, அண்ணாநகர் போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
இந்த நிலையில், காலை 8.30 மணிக்குப் பிறகு 6 மணி நேரத்தில் பாம்பன் பகுதியில் மட்டும் 25 செ.மீ மழை பதிவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. ராமநாதபுரத்தில் 22 செ.மீ. மழை பெய்துள்ளது.
இந்த நிலையில், நாகை, ராமநாதபுரம், மாஞ்சோலை பகுதிகளில் நாளை வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை பெய்து வருவதால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
இதனிடையே, ராமநாதபுரம், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.