தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்
|தமிழகத்தில் வரும் 15-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (10-10-2024) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மத்திய கிழக்கு அரேபிக் கடல், கர்நாடகா - கோவா கடற்கரை பகுதிகளில் நீடிக்கிறது. மேலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனைத்தொடர்ந்து தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் 12-ம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் வரும் 15-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது. அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. கோவை, விழுப்புரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் ஒரு வாரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை தொடரும். கடலோரம், உள் மாவட்டங்களில் மழை பரவலாக பெய்துள்ளது." என்று அவர் கூறினார்.