வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
|வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று இரவு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, அதற்கடுத்த இரண்டு நாட்களில் மேற்கு திசையில், தமிழகம்-இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் வருகிற 15-ந் தேதி வரையில் லேசான மழை பெய்யும். கடலோர தமிழகம், உள் தமிழகத்தில் நாளை (திங்கட்கிழமை) இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேநேரம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.