வேகம் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
|ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 430 கிமீ தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது.
சென்னை,
வங்கக் கடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. தொடர்ந்து தாழ்வு மண்டலமாகவும், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்தது. இது தொடர்ந்து புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் கணித்தது.
இதனால் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 18 செ.மீ. மழை கொட்டியது. அதே நேரம் வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாமல் கடந்த 2 நாட்களாக போக்குக் காட்டியது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசும் தீவிரப்படுத்தியது.
தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா? மாறாதா? என பலரும் எதிர்பார்த்து இருந்த நிலையில், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுபெற்று புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றும், இன்று (வெள்ளிக்கிழமை) காலை வரை மட்டுமே தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் நேற்று மாலை அறிவித்தது.
மேலும் அந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலைக்குள் படிப்படியாக வலு இழந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும், அது நாளை (சனிக்கிழமை) மாமல்லபுரம்-காரைக்காலுக்கு இடையே புதுச்சேரிக்கும், கடலூருக்கும் இடைப்பட்ட பகுதிகளை மையமாக கொண்டு கரையை கடக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 430 கிமீ தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. நகரும் வேகம் மணிக்கு 9 கிமீ-ல் இருந்து 7 கிமீ-ஆக குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் (நவ. 29, 30) ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இன்றும் நாளையும் மழை தீவிரமாக இருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து வருகிறது என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை) பதிவான மழையின் அளவு
கத்திவாக்கம் - 6.2 செ.மீ
பேசின் பிரிட்ஜ் - 4.8 செ.மீ
தண்டையார்பேட்டை - 4.4 செ.மீ
திருவொற்றியூர் - 4.4 செ.மீ
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.