< Back
வானிலை
நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
வானிலை

நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தினத்தந்தி
|
22 Nov 2024 6:57 AM IST

வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது.

சென்னை,

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக டெல்டா, தென் மற்றும் உள்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது.

இதன் காரணமாக தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை (சனிக்கிழமை) பிற்பகலுக்குள் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது அடுத்த 2 தினங்களில் (திங்கட்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று தெற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வரும்.

அதன் பின்னர் 26-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வட இலங்கை-டெல்டா மாவட்டங்களுக்கு இடையே நகரக்கூடும். அது அங்கு 24 மணி நேரம் முதல் 30 மணி நேரம் வரை அதே பகுதியில் நிலவக்கூடும். அது தொடர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயலாகவோ மாறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இதனால், தமிழகத்தில் இன்று முதல் 24-ம் தேதி வரை ஒருசில மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 25-ந்தேதி மாலையில் டெல்டா மாவட்டங்களில் மழை தொடங்கி, 26, 27 (புதன்கிழமை) மற்றும் 28 (வியாழக்கிழமை)-ந் தேதிகளில் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்