டெல்டா மாவட்டங்களில் இன்று அதிகனமழை எச்சரிக்கை
|வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுவடைகிறது.
சென்னை,
சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது:
வங்க கடலில் சென்னையில் இருந்து தென்கிழக்கே 940 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (செவ்வாய்க்கிழமை) தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழகம் - இலங்கை கடற்கரையை இது நோக்கி நகரும்.
இதன்காரணமாக, இன்று டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும். அதேபோல், நாளை கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புகள் உள்ளது. அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.