< Back
வானிலை
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
வானிலை

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

தினத்தந்தி
|
19 Nov 2024 5:43 AM IST

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

சென்னை,

தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம், டெல்டா மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை கொட்டித்தீர்த்தது. அதேபோல், நேற்றும் கனமழை காணப்பட்டது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணிநேரத்தில், அதிகபட்சமாக, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் 19 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

தற்போது, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களான மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, தெற்கு வங்கக்கடல் பகுதியில் வருகிற 23-ந்தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதன்காரணமாக, வடதமிழகம், கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் வருகிற 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையில் மீண்டும் மழைக்கான சாதகமான சூழல் நிலவுவதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

மேலும் செய்திகள்