டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
|தமிழகத்தில் காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.
இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (திங்கட்கிழமை) தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும், தொடர்ந்து அடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழகம் - இலங்கை கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்தது.
இதன்படி தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை யின் 3-வது சுற்று மழை நாளை மாலை தொடங்கி, அடுத்த மாதம் (டிசம்பர்) 2-ந்தேதி (திங்கட்கிழமை) வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாளை கடலோர தமிழகத்தில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
அதுமட்டுமல்லாமல், நாளை மறுதினம் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
அதற்கு அடுத்த நாள் (புதன்கிழமை) திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
28-ந்தேதி காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகள் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை வானிலை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகளில் இன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனபதால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
இந்நிலையில் தமிழகத்தில் காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி
செங்கல்பட்டு,
விழுப்புரம்,
கடலூர்,
புதுக்கோட்டை,
ராமநாதபுரம்,
தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.