தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஆத்தூர் பாலம் தண்ணீரில் மூழ்கியது
|கனமழையால் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆத்தூர் பாலம் தண்ணீரில் மூழ்கியது.
தூத்துக்குடி,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தென்தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வடதமிழகத்தில் அநேக இடங்களிலும் மழை பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.
இதனிடையே, கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தாமிரபரணி கரையோரங்களில் அமைந்துள்ள கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆத்தூர் பாலம் தண்ணீரில் மூழ்கியது. ஆத்தூர் - முக்காணி இடையேயான பாலம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. கடந்த ஆண்டு பெய்த மழை, வெள்ளத்தின் போது ஆத்தூர் புதிய மேம்பாலத்தின் ஒருபகுதி அடித்து செல்லப்பட்டது. இதனால், பழைய பாலத்தில் மட்டுமே வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது பழைய பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் தூத்துக்குடி, திருச்செந்தூர் இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் முக்காணியில் இருந்து ஏரல், குரும்பூர் வழியாக மாற்று பாதையில் இயக்கப்படுகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.