வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி: எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..?
|தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை,
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய, வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது, நேற்று மதியம் 2.30 மணியளவில் வலுப்பெற்று, அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அதற்கடுத்த, 2 தினங்களில் மேற்கு திசையில், தமிழகம்-இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
12 மாவட்டங்களில் இன்று கனமழை
இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (12-11-2024) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (13-11-2024), சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை பெய்யும் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், கடலில் காற்றின் வேகம் அதிகம் காணப்படுகிறது. எனவே, தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் நாளை வரை செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதி, அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.