< Back
வானிலை
பெங்கல் புயல் சென்னையை நெருங்க அதிக வாய்ப்பு
வானிலை

'பெங்கல் புயல்' சென்னையை நெருங்க அதிக வாய்ப்பு

தினத்தந்தி
|
27 Nov 2024 8:54 AM IST

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதற்கிடையே வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது வலுவடைந்து தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.

நேற்று மாலை நிலவரப்படி, அது நாகப்பட்டினத்துக்கு தெற்கு-தென் கிழக்கே 540 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கே-தென் கிழக்கே 650 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 740 கி.மீ. தொலைவிலும் நிலைக்கொண்டிருந்தது. இந்த சூழலில் இன்று அதிகாலை 1 மணி நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகரும் வேகம் அதிகரித்தது. அதன்படி, 8 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்தது.

இந்த சூழலில் வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி புயலாக (பெங்கல் புயல்) மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தென் கிழக்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.

நாகையில் இருந்து 400 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 510 கி.மீ., தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென் கிழக்கே 590 கி.மீ. தொலைவிலும் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வங்கக்கடலில் உருவாக உள்ள 'பெங்கல் புயல்' சென்னையை நெருங்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பெங்கல் புயல் சென்னை - புதுச்சேரி இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது பலத்த தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வங்கக் கடலில் உருவாக உள்ள பெங்கல் புயல் கரையை கடக்கும் முன்னரே வலுவிழக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி பெங்கல் புயல் உருவான பிறகு வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பெங்கல் புயலாக மாறியபின் நாளை நள்ளிரவு அல்லது நாளை மறுநாள் தமிழக கடலோர பகுதிகளை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இன்று கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 மாவட்டங்களில் அதிகனமழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை (வியாழக்கிழமை) கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இந்த மழை வருகிற 1-ந் தேதி வரை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன்படி தற்போது 650 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் மொத்தக் கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில், 2,198 மில்லியன் கன அடி இருப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்