பெஞ்சல் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது
|சென்னைக்கு தென்மேற்கே 120 கி.மீ. தொலைவில் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.
சென்னை,
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு 'பெஞ்சல்' என பெயர் சூட்டப்பட்டது. இந்த புயல் நேற்று இரவு மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இதனால் சென்னை உள்பட வடமாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
பெஞ்சல் புயல் காரணமாக பெய்த பெருமழையால் சென்னை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கரையைக் கடந்த பெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து வடமேற்கு திசையில் நகர்ந்து வந்தது.
இந்த நிலையில், பெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டிருந்த நிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வட உள் தமிழ்நாட்டில் நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரிக்கு மேற்கே 30 கி.மீ. தொலைவிலும், கடலூருக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்மேற்கே 120 கி.மீ. தொலைவிலும் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.