கரையை நெருங்கும் 'டானா' புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
|தீவிர புயலாக வலுவடைந்து, ஒடிசா-மேற்கு வங்காளம் இடையே கரையை கடக்க உள்ளது.
சென்னை,
வங்கக்கடலில் கடந்த 21-ந் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் தாழ்வு மண்டலமாகவும், அதனை தொடர்ந்து தீவிர தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்து, நேற்று புயலாகவும் வலுப்பெற்றது. இந்த புயலுக்கு 'டானா' என்று பெயரிடப்பட்டு இருக்கிறது.
டானா புயல், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று தீவிர புயலாகவும் உருவெடுக்க உள்ளது. தீவிர புயலாக வடக்கு ஒடிசா-மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில், பூரி-சாகர் தீவுகளுக்கு இடையே இன்று இரவோ அல்லது நாளை (வெள்ளிக்கிழமை) காலையோ கரையை கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது. தற்போது டானா புயல் 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும் நேரத்தில் காற்றின் வேகம் மணிக்கு 100 கி.மீ. முதல் 120 கி.மீ. வரை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே மத்திய கிழக்கு, மத்திய மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகள், மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளில் இன்றும், நாளையும் காற்று பலமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டு இருக்கின்றனர்.
புயலை எதிர்கொள்ள மேற்கு வங்காள அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்காள அரசு அறிவித்துள்ளது. மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ், வடக்கு 24 பர்கானாஸ், கிழக்கு மேதினிபூர், மேற்கு மேதினிபூர், ஜார்கிராம், பாங்குரா, ஹுக்ளி, அவுரா மற்றும் கொல்கத்தா ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று முதல் 26ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் 'டானா' புயல் வெள்ளிக்கிழமை கரையைக் கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 14 மாவட்டங்களில் முதன்மையாக கடலோரப் பகுதியில் உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிக்கப்படக்கூடிய கிராமங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தேசிய பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எப்), ஒடிசா பேரிடர் அதிவிரைவுப் படை (ஒடிஆர்ஏஎப்), தீயணைப்பு சேவைகள் ஆகியவற்றின் 28 மீட்புக் குழுக்கள் களத்தில் உள்ளன. டானா' புயல் கரையை கடக்கும் முன் சுமார் 10 லட்சம் பேர் வெளியேற்றப்படுவார்கள் என்று மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் சுரேஷ் பூஜாரி தெரிவித்தார். மக்களை தங்கவைப்பதற்காக 600-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு குழந்தைகள், பெண்களுக்கு பால், உணவு கிடைக்கவும் மருத்துவ வசதிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
'டானா' புயலைக் கருத்தில் கொண்டு ஒடிசா, மேற்கு வங்காளம் உள்பட 5 மாநிலங்களில் மொத்தம் 56 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மரம் வெட்டும் கருவிகள், படகுகள், முதலுதவி கருவிகள் மற்றும் பிற வெள்ள மீட்பு கருவிகள் என அனைத்து அடிப்படை வசதிகளுடன் மீட்புக் குழுக்கள் தயார்நிலையில் உள்ளனர்.
ரெயில்கள் ரத்து
அச்சுறுத்தும் 'டானா' புயல் காரணமாக 350 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், மீட்புப் பணிக்கு கப்பல்கள், விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் டானா புயல் காரணமாக இன்றும், நாளையும் 150 ரெயில்களை ரத்து செய்வதாக தென்கிழக்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதேபோல் ஒடிசாவிலிருந்து செல்லும் 198 ரெயில்களை ரத்து செய்வதாக கிழக்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா..?
டானா புயலால் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு இல்லை. இருப்பினும் குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.