சென்னை உள்பட 15 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
|நாளை அல்லது நாளை மறுநாள் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது 2 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம், அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதி மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரும்.
அதேபோல், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. மேலும், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. நாளை (புதன்கிழமை) அல்லது நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புகள் உள்ளது.
15-10-2024 (இன்று): டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அந்த வகையில், 15 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும். வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
16-10-2024 (நாளை): திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்பரம், கடலூர், டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கும், ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
17-10-2024 (நாளை மறுநாள்): வடதமிழகத்தில் அனேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், சென்னை, காஞ்சீபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.