6 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
|நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
நேற்று மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று மாலை அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வழுவிழந்து, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 24-ம் தேதி வாக்கில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை ஒட்டிய வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும்.
இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.