18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
|திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
வங்கக்கடலில் நேற்று உருவான பெஞ்சல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று (சனிக்கிழமை) மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் தீவிரமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.