20 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
|கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
நேற்று (30-11-2024) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய "பெஞ்சல்" புயல், மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழக - புதுவை கடற்கரையை, புதுச்சேரி அருகில் இரவு 10.30 - 11.30 மணி அளவில், கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசியது.
கரையை கடந்த பெஞ்சல் புயல் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இந்த நிலையில் தற்போது பெஞ்சல் புயல் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வட உள் தமிழ்நாட்டில் நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், தேனி, தென்காசி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.